கான்ட்ராக்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.9 லட்சம் பறித்த 4 பேர் சிக்கினர்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அபிமன்யூ திஸ்வால் (52). இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். காப்பர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வட மாநில இளைஞர்களை வைத்து கான்ரக்ட் தொழில் செய்து வந்தார். இவர், கடந்த 10ம் தேதி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் உள்ள வங்கியில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கார்பன் தொழிற்சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, சில மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து, புகாரின்பேரில், மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.ரமேஷ், இன்ஸ்பெக்டர் சத்திவேல் ஆகியோர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைத்து ஆந்திரா, சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் சிப்காட் போலீசார் கன்னியம்மன் கோயில் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, சென்னையிலிருந்து, ஆந்திரா நோக்கி வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேரை மடக்கி சோதனை செய்தபோது, அவர்கள்   முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இதனையடுத்து, 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை சேர்ந்த ஜெகன் (28), பூக்கடை மணிகண்டன் (32), ஒரிசாவை சேர்ந்த ஜெயந்தர் மாலிக் (32), ஆந்திர மாநிலம் நாகலாபுரம் சலீம்பாஷா (28) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த மாதம் 10ம் தேதி அபிமன்யூ திஸ்வாலிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து கத்தி, இருசக்கர வாகனம், ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், 2.45 கிராம் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: