கொச்சி கடற்படை தளத்தில் விமானம் தாங்கி கப்பலில் திருட்டு: என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

புதுடெல்லி: கொச்சி கடற்படை தளத்தில் கட்டப்படும் உள்நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பலில் இருந்து கம்ப்யூட்டர் பாகங்களை திருடியதாக கைது செய்யப்பட்ட 2 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொச்சி கடற்படை தளத்தில், உள்நாட்டிலேயே முதல் விமானம் தாங்கி கப்பலை இந்திய கடற்படை கட்டி வருகிறது. கடந்த ஆண்டு இந்த கப்பலில் இருந்து புராசசர், ரேம் உள்ளிட்ட முக்கியமான கம்ப்யூட்டர் பாகங்கள் திருடுபோயின. இதனால், கப்பலின் பாதுகாப்பு குறித்து அச்சம் உருவானது.

இதுதொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்புக்கு வழக்கு மாற்றப்பட்டது. சுமார் 5,000 பேரிடம் என்ஐஏ விசாரணை நடத்தி, கம்ப்யூட்டர் பாகங்களை திருடியவர்கள், ஒப்பந்த பெயின்டர்களான பீகாரை சேர்ந்த சுமித் குமார், ராஜஸ்தானை சேர்ந்த தயா ராம் என்பதை கண்டுபிடித்தது. கடந்த ஜூன் மாதம் இருவரும் அவரவர் சொந்த ஊர்களில் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட பாகங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், பிடிபட்ட இரு நபர்கள் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ்  என்ஐஏ நேற்று முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Related Stories: