தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் இஐஏ அறிக்கை: டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை மறுசீராய்வு செய்ய மத்திய அரசு மனு தாக்கல்!

புதுடெல்லி: தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுச்சூழல் தாக்க  மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது இந்தி மற்று ஆங்கில மொழிகளில் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்தான விவாதங்கள் எழுந்த நிலையில், அறிக்கை குறித்தான கருத்தை 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரைவு அறிக்கையானது தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் விக்ராந்த் டோங்கட் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட்டது.  இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், முதலில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும்படி கூறியது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கும்படி உத்தரவிட்ட முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், ஏற்கனவே வழக்கு தொடர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் வரும் 23ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: