வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம்: பிரேசில் கால்பந்து சங்கம் முடிவு

ரியோ டீ ஜெனிரோ: தேசிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு வழங்கப்படுவது போன்று வீராங்கனைகளுக்கும் ஒரே ஊதியம் வழங்க என்று பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ஆண்களுக்கான விளையாட்டு, பெண்களுக்கான விளையாட்டு என விளையாட்டில் எந்த பாகுபாடும் இல்லை. ஆண்கள் ஆட்டத்துக்கு வரும் கூட்டம் இப்போது பெண்கள் ஆட்டத்துக்கும் வர ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஆண்கள், பெண்களுக்கான ஊதியத்தில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தொடர்கிறது. அதுமட்டுமல்ல டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து என எல்லா விளையாட்டுகளிலும் வழங்கப்படும் பரிசுத்தொகையும் ஆண்களுக்கு பல மடங்கு அதிகம்.

இந்த வித்தியாசம் அவ்வப்போது விவாதங்களாக எழுந்து ஓரிரு நாட்களல் அடங்கிப் போய்விடும். அரிதாக சில சங்கங்கள் இந்த சம ஊதியத்தை அமல்படுத்தியுள்ளன. நார்வே, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளின் சங்கங்கள், சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம் வழங்க முடிவு செய்துள்ள நாடுகள். இந்தப் பட்டியலில் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு (சிபிஎப்) இணைய உள்ளது. இதனால் பிரேசில் முன்னனி வீரர்களான நெய்மர், ஜீசஸ், பிர்மினோ பெறும் அதே ஊதியத்தை இனி தேசிய பெண்கள் அணி வீராங்கனைகளும் பெறுவார்கள்.

* அமெரிக்காவில் அப்பீல்

பிபா பெண்கள் கால்பந்து தொடரின் நடப்பு சாம்பியனான அமெரிக்க வீராங்கனைகள் சம ஊதியம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு ‘விசாரிக்க உகந்ததில்லை’ என்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்துள்ளனர்.

Related Stories: