அயப்பாக்கம் குடியிருப்பில் வீட்டையே குடோனாக மாற்றி குட்கா விற்பனை: 1 டன் பறிமுதல்

சென்னை: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு வாங்கி, குடோனாக மாற்றி குட்காவை பதுக்கிய வியாபாரியை போலீசார் தேடுகின்றனர். ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்திக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் வீட்டு உரிமையாளர் முன்னிலையில்  பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு போலீசார் சோதனை செய்தபோது குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அங்கிருந்த ஒரு டன் எடையுள்ள ரூ.7லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சிவகங்கையை சேர்ந்த முருகேசன் (45) என்பவர் அப்பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்துள்ளார். பின்னர், குடும்பத்தினரை வேறொரு வீட்டில் தங்க வைத்துவிட்டு அந்த வீட்டை குடோனாக  மாற்றி குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வியாபாரி முருகேசனை தேடி வருகின்றனர்.

Related Stories: