ஃபேஸ்புக் ஊழியர்கள் பிரதமரை வசைப்பாடுகிறார்கள்..: மார்க் ஜூகர்பெர்க்குக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம்

புதுடெல்லி: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார். சமீபகாலமாக ஃபேஸ்புக் இணையதளத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக பரவலாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. பாஜக கட்சிக்கு எதிரான கருத்துக்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜூர்னல் பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக, ஃபேஸ்புக் வாட்ஸ் ஆப் இடையேயான தொடர்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுவரை அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஃபேஸ்புக் இந்தியா மீது பாரதிய ஜனதாவும் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் சிலர் சித்தாந்த நம்பிக்கைகளுடன் செயல்படுகின்றனர். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க பேஸ்புக்கை பயன்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதே வலதுசாரி கொள்கையை ஆதரிப்பவர்களின் பக்கங்களை நீக்கியதுடன், அவர்களது கருத்துகள் பெரிதாக சென்றடையாத வண்ணம் பேஸ்புக் இந்தியா ஊழியர்கள் பார்த்துக்கொண்டனர். இந்த பாரபட்சம் குறித்து 10க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களால் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கே அந்த ஊழியர்கள் ஆதரவாக உள்ளனர். பிரதமர் மோடியையும், மூத்த மத்திய அமைச்சர்களையும் வசைப்பாடி வருகிறார்கள். இந்த போக்கு நீடிக்காமல் இருக்க தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம், என கூறியுள்ளார்.

Related Stories: