ஆண்டுக்கு ரூ.7 லட்சம் கோடி வர்த்தகம் பொம்மைகள் தயாரிப்பில் உலகின் மையமாக இந்தியா மாற வேண்டும்: தொழில் முனைவோருக்கு பிரதமர் அழைப்பு

புதுடெல்லி: உலகளவில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் பொம்மை தயாரிப்பு தொழில் துறையில் இந்தியா மிகவும் பின்தங்கி இருப்பது பற்றி கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பொம்மை தயாரிப்பில் இந்தியாவை உலகின் மையமாக மாற்றும்படி தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மான் கி பாத்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். கடந்த 2014ல் அவர் ஆட்சிக்கு வந்தது முதல், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறார். நேற்று அவர் ஆற்றிய 68வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியதாவது:

இது பண்டிகைகளுக்கான காலம். நமது பண்டிகைகளும், சுற்றுச்சூழலும். இந்த இரண்டுக்கும் இடையே ஒரு மிக ஆழமான தொடர்பு உள்ளது. இந்த வாரத்தில் ஓணம் பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இது நமது விவசாயத்தோடு தொடர்புடைய பண்டிகை. விவசாயிகளின் ஆற்றலால் மட்டுமே நமது வாழ்க்கை, நமது சமூகம் ஆகியவை இயங்குகின்றன. நமது விவசாயிகள், கொரோனா நிலவும் இந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தங்கள் ஆற்றலை நிரூபித்துள்ளனர்.

நமது  நாட்டில் இந்த முறை முன்பட்டப் பயிர் விதை நடவை, கடந்த ஆண்டை விடவும் 7 சதவீதம் அதிகம் செய்து இருக்கிறார்கள். இதற்காக, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன், அவர்களின் உழைப்பைப் போற்றுகிறேன். இந்திய விளையாட்டுப் பொருட்கள். இந்திய நாட்டுக் குழந்தைகளுக்குப் புதிய புதிய விளையாட்டுப் பொருட்களை எப்படி அளிப்பது, உலக விளையாட்டுப் பொருட்களின் சந்தையில் இந்தியாவை எப்படி மையப்புள்ளியாக மாற்றுவது என்பது பற்றி அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. உலகளவிலான விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில் துறையின் ஆண்டு சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகம்.  

ஆனால்,  இதில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. அதனால், பொம்மை தயாரிப்பில் இந்தியாவையும் உலகின் மையப்புள்ளியாக மாற்ற, தொழில் முனைவர்கள் முன்வர வேண்டும். குடிசைத் தொழிலோ, குறு-சிறு தொழிலோ, பெரிய தொழில்களோ, தொழில் முனைவோரோ அனைவரும் இதன் வட்டத்திற்குள் வர வேண்டும். எனவே, பொம்மை தயாரிக்க புதிய தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் இது.

நமது சிறார்களுக்காக, புதியதொரு வகையிலான, நல்ல தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்போம். கம்ப்யூட்டரும், ஸ்மார்ட் போனும் உள்ள இந்த காலக்கட்டத்தில் கணிப்பொறி விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான விளையாட்டுக்களின் மையக்கரு அந்நிய நாடுகளின் கலாச்சாரத்தைத் தழுவி அமைந்திருக்கிறது. நமது பாரம்பரியம் மிகவும் வளமானது. இவற்றை அடியொற்றி இந்தியாவுக்கான விளையாட்டுக்களை வடிவமையுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

கொரோனா பரவல் உள்ள இந்த தருணத்தில் நமது ஆசிரியப் பெருமக்கள் படிப்பில் தொழில்நுட்பத்தை எத்தனை அதிக அளவு பயன்படுத்தலாம் என்பதை இயல்பாக கையாண்டனர். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மக்கள் அனைவரும் இடம் பெற வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே கொரோனாவை வீழ்த்த முடியும்.  ஒரு மீட்டர் இடைவெளி, முகக்கவசம் நீ அணி என்ற உறுதிப்பாட்டைப் பின்பற்றுங்கள்.  நீங்கள் நல்ல உடல்நலத்தோடு இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* பொம்மைக்கு பெயர் போன தஞ்சாவூர்

மோடி மேலும் பேசுகையில், ‘‘இந்தியாவில் சில இடங்கள் விளையாட்டுப் பொருட்களின் மையங்கள் என்ற வகையில் மேம்பாடு அடைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, கர்நாடகா மாநிலம் ராமநகரத்தில் உள்ள சன்னபட்னா, ஆந்திர மாநிலம் கிருஷ்ணாவில் இருக்கும் கொண்டப்பள்ளி, தமிழ்நாட்டின்  தஞ்சாவூர், அசாமின் துப்ரி, உத்தர பிரதேசத்தின் வாரணாசி என இப்படிப்பட்ட இடங்கள் பலவற்றைக் கூறலாம்,’’ என்றார்.  

* ராஜபாளையம், சிப்பி நாய்கள்

மோடி மேலும் பேசுகையில், ‘‘இந்திய ராணுவத்தில் உள்ள சோபி, விதா ஆகிய நாய்களுக்கு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நாய்கள் பல குண்டு வெடிப்புகளையும், தீவிரவாத சூழ்ச்சிகளையும் முறியடிப்பதில் மிக முக்கிய பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன. பேரிடர் மேலாண்மையிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் நாய்களின் பங்கு மிகப்பெரியது. இந்திய ரக நாய்களில் முதோல் ஹவுண்டுகள், ஹிமாச்சலி ஹவுண்டுகள் இருக்கின்றன. ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற மிக அருமையான இந்திய ரக நாய்கள் உண்டு. இவை இந்திய சூழலுக்கு ஏற்ப உள்ளன,’’ என்றார்.

Related Stories: