அல்லேரி மலையில் போலீசாரை தாக்கிய கள்ளச்சாராய கும்பலை பிடிக்க துப்பாக்கி போலீஸ் முகாம்

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை கிராமத்தில் கள்ளச்சாராய தடுப்புக்காக அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் சென்றனர். இதற்காக நெல்லிமரத்து கொல்லை மலை கிராமம் வழியாக போலீசார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கள்ளச்சாராய வியாபாரி கணேசன் தலைமையில் 20 பேர் கொண்ட கும்பல், போலீசாரை வழிமறித்து கம்பு, கற்கள், நாட்டுத்துப்பாக்கியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில், எஸ்ஐ சிவக்குமார், ஏட்டு அன்பழகன், காவலர் ராகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அறிந்ததும் டிஐஜி காமினி, எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில், ஏடிஎஸ்பி மதிவாணன், டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு, விநாயகம் மற்றும் அதிரடிப்படை, உள்ளூர் மற்றும் கலால் போலீசார் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் வருவாய்த்துறை, வனத்துறையை சேர்ந்த தலா ஒருவர் உட்பட மொத்தம் 120 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தனிப்படையினர் துப்பாக்கிகளுடன் நேற்று அல்லேரி மலைக்கிராமத்துக்கு படையெடுத்து வீடு, வீடாக சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், போலீசார் தங்கள் கிராமத்தை சுற்றிவளைக்கலாம் என்று தெரிந்து அல்லேரி மலை கிராம மக்கள் அனைவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். தொடர்ந்து, ஹெலிகேம் கேமராக்கள், மற்றும் பைனாகுலர் மூலம், கும்பல் மலையில் எங்காவது பதுங்கி உள்ளார்களா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில் சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: