கேரள வியாபாரிகள் வராததால் குமரியில் களை இழந்த ஓணம் வாழை சந்தை

நாகர்கோவில்:  நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் வாரம் ேதாறும் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் வாழைகுலை சந்தை  நடப்பது வழக்கம். இந்த நாட்களில் கேரள வியாபாரிகள் அதிக அளவு வந்து வாழை குலைகளை ஏலம் எடுத்து செல்வார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக குமரி மாவட்டத்திற்கு கேரள வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக அதிக விலைக்கு விற்ற வாழை  குலைகள் குறைந்த விலைக்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். மலையாளிகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான  ஓணம் பண்டிகை வருகிற 31ம் தேதி வருகிறது. வருடம் தோறும் ஓணம் பண்டிகை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு அப்டா மார்க்கெட்டில் ஓணம் வாழை சந்தை நடக்கும். கடந்த வருடம்  அதிக அளவு கேரள வியாபாரிகள் வந்து வாழை குலைகளை வாங்கி சென்றனர். இந்த வருட ஓணம் வாழை சந்ைத அப்டா மார்க்கெட்டில் நேற்று  நடந்தது. நெல்லை மாவட்டம் களக்காடு, வள்ளியூர், குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம், தெரிசனங்கோப்பு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து  அதிக அளவு வாழைகுலைகள் விற்பனைக்கு வந்து இருந்தன.

ஆனால் கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால், விலைகள் குறைந்த விலைக்கு ஏலம் போனது. குமரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் வாழை  குலைகளை ஏலம் எடுத்து கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். இதுபோல் காய்கறிகளும் அதிக அளவு விற்பனைக்கு வந்து இருந்தன. காய்கறிகளையும் குமரி வியாபாரிகள் வாங்கி அனுப்பி வைத்தனர்.  நேற்று  நடந்த ஓணம் வாழை சந்தையில் ரசகதளி குலை ரூ.250ல் இருந்து 300 வரைக்கு விலை போனது. பெரிய குலைகள் ரூ.550 வரை விலை போனது.  80 காய் கொண்ட செவ்வாழை குலை ரூ.800க்கும், 40 காய் கொண்ட எத்தன் குலை ரூ.400க்கும், 150 காய் கொண்ட மட்டி குலை ரூ.600க்கும் விலை  போனது. இதுபோல் 110 காய் கொண்ட பச்சை பழம் ரூ.300க்கும், 150 காய் கொண்ட பாளையங்கோட்டை குலை ரூ.300க்கும், 110 காய் கொண்ட  வெள்ளைதொழுவன் ரூ.300க்கும், 100 காய் கொண்ட நாட்டுபேயன் ரூ.300க்கும் விலை போனது.

இது குறித்து வாழைகுலை மொத்த வியாபாரி நடராஜன் கூறியதாவது: அப்டா மார்க்கெட்டில் நேற்று நடந்த ஓணம் வாழைசந்தையில் அதிக அளவு  வாழைகுலைகள் வந்து இருந்தன. ஆனால் போதிய வியாபாரிகள் வராததால் அவை குறைந்த விலைக்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள்  எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. கொரோனா தொற்றால் ஓணம் வாழை குலை சந்தை களை இழந்து விட்டது என்றார்.

பூக்கள் விற்பனை கடும் பாதிப்பு

 கொரோனா பரவலை தடுக்க  வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வருவதற்கு கேரள அரசு தடை  விதித்துள்ளது. இதனால் தோவாளை பூ  மார்க்கெட்டிற்கு கேரளா வியாபாரிகள்  வரவில்லை. இதனால் பூ வியாபாரிகள் மற்றும் பூ விவசாயிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே  கொரோனா ஊரடங்கால் பூக்கள் விற்பனை இல்லாமல்  தவிக்கும் வியாபாரிகள் ஓண வியாபாரத்தை பெரிதாக நம்பி இருந்தனர். ஆனால்  ஓணம்  விற்பனை மிகவும் குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

 தற்போது பண்டிகை இல்லாத காலத்தில் செல்வது போன்று  அரை டன் , ஒருடன் பூக்கள் மட்டுமே கேரளாவுக்கு செல்கிறது. வழக்கமாக ஓண   காலத்தில் மல்லிகை விலை கிலோ ரூ. 2000 வரை உயரும். ஆனால் இந்த முறை ரூ.200  ஆக இருப்பது வியாபாரிகள் மற்றும் பூ விவசாயிகளை  மிகவும் வேதனை அடைய  செய்துள்ளது.

Related Stories: