கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி திட்டப்பயிற்சி முகாம் இந்த ஆண்டு ரத்து : இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பெங்களூர் : கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த பள்ளி மாணவர்களுக்கான இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டவும், விண்வெளி ஆராய்ச்சி சிந்தனையை ஏற்படுத்தவும், இஸ்ரோ சார்பில் இளம் விஞ்ஞானி பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. 9ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். 8ம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், என்சிசி, என்எஸ்எஸ், ஸ்போர்ட்ஸ், சாரணர் இயக்க பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் YUVIKA பயிற்சி திட்டத்துக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஒரு மாநிலத்துக்கு 3 மாணவர்கள் இவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் திருவனந்தபுரம், பெங்களூரு, ஷில்லாங், அகமதாபாத் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் ஏதேனும் ஒரு இஸ்ரோ மையத்துக்கு அழைத்துச் செய்யப்படுவர். அங்கு மாணவர்களுக்கு விண்வெளி பற்றிய அடிப்படை தத்துவம், கோள்களின் இயக்கம், ராக்கெட் செயல்பாடு போன்ற அடிப்படை ஆராய்ச்சி விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.நடப்பு ஆண்டிற்கான ISRO YUVIKA 2020 மே மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. இறுதி கட்ட பட்டியலும் இஸ்ரோ வெளியிடுவதாக இருந்தது.

இதனிடையே கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து, மே 11ம் தேதி நடைபெறுவதாக இருந்த இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது. இருப்பினும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் எப்போது குறையும் என்று தெரியாது. தொற்றின் தீவிரம் தணியாததால் ‘யுவிகா’சார்ந்த பணிகளை திட்டமிட்டபடி மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது.இதன்காரணமாக இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி ரத்து செய்யப்படுவதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in/ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: