பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை: இலங்கை அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ‘இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதையே இலங்கை தனது புதிய வெளியுறவுக் கொள்கையாக கடைபிடித்து, இருதரப்பு பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கும்’ என இலங்கையின் வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் கூறி உள்ளார். இலங்கையில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியுறவு அமைச்சராக கடந்த 14ம் தேதி பொறுப்பேற்றார். அவர், வெளியுறவு துறையின் புதிய செயலாளராக அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜை நியமித்துள்ளார்.இவர்,  பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய பிராந்திய வெளியுறவு கொள்கையை இலங்கை தற்போது கொண்டுள்ளது. எனவே, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் இலங்கை செய்யாது. பிராந்திய பாதுகாப்பில் முக்கிய அம்சமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிப்பார். சீனா இரண்டாவது பெரிய பொருளாதார நாடு, இந்தியா 6வது பெரிய பொருளாதார நாடு. கடந்த 2018ல் உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டிய நாடாக இந்தியா இருந்தது.

இந்த இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கு மத்தியில் நாங்கள் இருக்கிறோம். இலங்கையை யாரும் விலைக்கு வாங்க முடியாது. விலைக்கு வாங்கவும் கூடாது. வேறு எந்த நாட்டிற்கு எதிரான செயல்களை செய்ய குறிப்பிட்ட நாட்டை ஒரு தளமாக பயன்படுத்த முடியாது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக. கிழக்கு துறைமுகத்தில் ஹம்பன்தோட்டாவில் சீனா முதலீடு செய்துள்ளது. இங்கு இந்தியா ஆர்வம் காட்டாததால் அந்த முதலீட்டை சீன நிறுவனம் பெற்றது. இதை வணிக நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: