பைக் மீது லாரி மோதி பெண் பலி போலீசாரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: வாலாஜாபாத் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த மதூர், சிறுதாமூர் ஆகிய பகுதிகளில் இயங்கும், கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் திருமுக்கூடல் வழியாக இரவு பகலாக செல்கின்றன. இதனால், கடந்த ஒரு மாதத்தில் 5 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். கிராமத்தின் வழியாக லாரிகளை இயக்காமல், மாற்று வழியில் அனுப்ப கோரி அப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள், கல் குவாரி உரிமையாளர்களிடம் கையூட்டு பெற்று கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில், திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவரது மனைவி மகேஸ்வரி (45). கடந்த 2 நாட்களுக்கு முன், கிராமத்தின் வழியாக ஏராளமான லாரிகள் வேகமாக சென்றன. இதை பார்த்த பாண்டிதுரை, அதிகாரிகளின் குளறுபடியால் வாகனங்கள், கிராமங்கள் வேகமாக செல்கின்றன என சத்தமாக பேசியுள்ளார்.

இதையறிந்த சாலவாக்கம் போலீசார், நேற்று முன்தினம் அதிகாலை பாண்டிதுரையை, விசாரணைக்காக, காவல் நிலையம் அழைத்து சென்றனர். மதியம் வரைஅவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து  மகேஸ்வரி, மதியம் 1 மணியளவில் காவல் நிலையம் சென்றார். அப்போது போலீசார், பாண்டிதுரையை அடித்து துன்புறுத்தியதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து. இனி அரசு அதிகாரிகளை தவறாக பேச மாட்டேன் என எழுதி, பாண்டிதுரையிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, மாலை 6 மணிக்கு அவரை, போலீசார் அனுப்பியதாக கூறப்படுகிறது.அங்கிருந்து பாண்டிதுரை, மனைவியுடன் பைக்கில் புறப்பட்டார்.

மதூர் கூட்டுசாலையை கடந்து, சென்றபோது, எதிரே மதுர் பகுதியில் செயல்படும் கல்குவாரிக்கு வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி, அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயேஇறந்தார். பாண்டிதுரை படுகாயமடைந்தார். இதை கண்ட டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிவிட்டார்.தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.

ஆனால், அங்கிருந்த பொதுமக்கள், போலீசாரிடம் இந்த பகுதியில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க வேண்டும். கல்குவாரி லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பாண்டிதுரை சாவுக்கு போலீசார் பொறுப்பேற்க வேண்டும். கலெக்டர் நேரில் வந்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார், அவர்களிடம் சமரசம் பேசி உரிய நடிவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், நேற்று முன்தினம் இரவு சுமார் 3 மணிநேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: