வங்கி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான நீரவ் மோடியின் மனைவிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்!

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி நீரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். நீரவ் மோடி மீதான மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றி திரிவது தெரிய வந்தது. இதையடுத்து, இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 19ம் தேதி அவரை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமின் கோரி அவர் பலமுறை தாக்கல் செய்த மனுக்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. லண்டனில் அவரது நீதிமன்ற காவல் வரும் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்திற்காக நீரவ் மோடி நடத்திய சில நிறுவனங்களில் ஆமி மோடி இயக்குநராக இருந்துள்ளார். வங்கி மோசடி நடந்த சமயத்தில் அவர் இந்தியாவில் இருந்து தப்பி அமெரிக்காவுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்டர்போல் பிறப்பித்துள்ள ரெட்கார்னர் நோட்டீஸ் என்பது சர்வதேச கைது வாரன்டாகும், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: