வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா ஆக 29-ல் தொடக்கம்!: கொரோனா பரவலால் பக்தர்களுக்கு அனுமதியில்லை..மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!!

நாகை: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா வருகின்ற 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் , கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மேரி அன்னை ஆலய ஆண்டு திருவிழா வருடாவருடம் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மேரி அன்னையை வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதையடுத்து கொரோனா காரணமாக எந்த நாளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று தேவாலயம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாவில் கலந்துக்கொள்ள மாவட்ட நிர்வாகமும் தடை விதித்துள்ளது. தடை உத்தரவை மீறி கலந்துக்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடியேற்ற திருவிழாவில் பேராலய அதிபர் பங்கு தந்தை மற்றும் அருட் தந்தையர்கள் உள்ளிட்ட 30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியில் வெளியூர் வாசிகள் தங்கினால், அவர்கள் மீதும் அவர்களுக்கு அறை கொடுக்கும் லார்ஜ் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: