செங்கல்பட்டு அருகே பரபரப்பு நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார் சாம்பல்: 6 பேர் உயிர் தப்பினர்

செங்கல்பட்டு: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார், திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. காரில் இருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் குமார். உளுந்தூர்பேட்டையில் உள்ள தனது உறவினரின் திருமணத்துக்காக குமார், கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் காரில் சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்து, நேற்று அனைவரும் சென்னைக்கு புறப்பட்டனர். நேற்று மாலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பழவேலி பைபாஸ் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன்புறம் புகை வந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், உடனே காரை, சாலையோரத்தில் நிறுத்தினார். அதற்குள், கார் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அனைவரும் அலறியடித்து கொண்டு, கீழே குதித்து ஓடினர். தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்தது. காரில் பயணம் செய்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைத்தனர். அதற்குள், கார் முழுவதுமாக எரிந்து, எலும்புக்கூடுபோல் காட்சியளித்தது. புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 2 கிமீ தூரம் வரிசையில் நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: