இளைஞரை தாக்கியதாக புகார்!: சிறையில் உள்ள சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் மீது மீண்டும் 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு..!!

சாத்தான்குளம்: கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கைதியை கடுமையாக தாக்கப்பட்டதாக  கூறப்படும் சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் மீது மீண்டும் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேய்க்குளத்தை சேர்ந்த ராஜாசிங் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் சாத்தான்குளம் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட போது அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து ராஜாசிங்கை கோவில்பட்டி கிளை சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.

இதனிடையே சாத்தான்குளம் தந்தை  - மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி சிறைச்சாலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி திரு. ஹேமா விசாரணை மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட ராஜாசிங், தன்னை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் கடுமையாக தாக்கியதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். இதனை அடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது 8 பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று ராஜாசிங் மற்றும் போலீசார் தாக்கியதை நேரில் பார்த்த 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 7 மணி நேரம்  விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories: