தந்தையை இழந்த துயரத்திலும் சுதந்திர தின அணிவகுப்புக்கு தலைமை வகித்த பெண் இன்ஸ்பெக்டர்: நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

நெல்லை:  நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நேற்று காலை பாளையங்கோட்டை வ.உ.சி.  மைதானத்தில் நடந்தது. அங்கு நடந்த அணிவகுப்புக்கு தலைமை வகித்து வழி நடத்திச் சென்றவர், நெல்லை மாவட்ட ஆயுதப்படை பெண்  இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி. சீருடை அணிந்து மிடுக்காக அணிவகுப்பை நடத்திச் சென்ற இன்ஸ்பெக்டரின் பின்னால் இப்படியொரு சோகம் இருப்பது  வேறு யாருக்கும் தெரியாது.  அந்த பெண் இன்ஸ்பெக்டரின் தந்தை  நாராயணசாமி (83), திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு உடல்  நலக்குறைவால்  உயிரிழந்தார்.

தந்தை இறந்த துக்க செய்தி  அறிந்தபோதும், சுதந்திர தின கொண்டாட்டம் முடிந்த பிறகு திண்டுக்கல் சென்று தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து  கொள்ளலாம் என மகேஸ்வரியும், போலீசாக பணியாற்றும் அவரது கணவர் பாலமுருகனும் முடிவு செய்தனர். அதன்படி திட்டமிட்டபடியே தந்தை  இறந்த சோகத்தை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தாங்கிக் கொண்டு, முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் நெல்லை மாவட்ட சுதந்திர தின  அணிவகுப்பை தலைமை வகித்து நடத்திச் சென்றார். கொண்டாட்டங்கள் காலை 9.30 மணிக்கு நிறைவு பெற்ற பிறகு சக போலீசார் வழியனுப்ப  கண்ணீர் மல்க இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார். இச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: