திருத்தணியில் பெண்ணை கொன்ற வழக்கில் பெண் சாராய வியாபாரி ஆண் நண்பருடன் கைது

திருத்தணி: திருத்தணி அருகே தேக்கு தோப்பில்  கழுத்தை நெரித்து பெண்ணை கொன்ற வழக்கில் பெண் சாராயவியாபாரி,ஆண் நண்பர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி நவநீதியம்மாள் (55). இவர், பொன்பாடி மேட்டு காலனியை சேர்ந்த சிவகாமி (36) என்பவருக்கு அடிக்கடி பணம் கடனாக கொடுத்து வந்தார். கடந்த 28ம் தேதி நவநீதியம்மாள், சிவகாமியிடம் பணம் வாங்கி வருவதாக கூறி சென்றார். அதற்கு பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், திருத்தணி போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி மாலையில் பொன்பாடி மேட்டு காலனி அருகே தேக்கு தோப்பில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருத்தணி டிஎஸ்பி சேகர், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை பார்வையிட்டனர். இறந்து கிடந்த பெண் மாயமான நவநீதியம்மாள் என தெரிந்தது. அவர் அணிந்திருந்த கம்மல், தாலிச்சரடு மற்றும் தங்கசெயின், மூக்குத்தி உள்பட 10 பவுன் நகைகள் மாயானதும் தெரிந்தது.

இதையடுத்து  சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சந்தேகத்தின் பேரில் சிவகாமி வீட்டிற்கு போலீசார் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. சிவகாமி, கடந்த 28ம் தேதி  இரவு, ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபருடன்  வீட்டில் தங்கியிருந்தாக கூறப்படுகிறது. மேலும், சிவகாமி, வீட்டின் அருகே, டிராக்டரில், 6000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தாக, மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்தான் சிவகாமி ஜாமீனில் வெளியே வந்தார் என்பது தெரிந்தது. இதுகுறித்து  திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனர். அதில் நவநீதியம்மாள் பணத்தை திருப்பி கேட்டதால் சிவகாமியால் கொடுக்க முடியவில்லை. இதனால் அவரும், நாயுடுபேட்டையை சேர்ந்த சுரேஷ் (35) என்ற வாலிபரும் சேர்ந்து கழுத்தை நெரித்து நவநீதியம்மாளை கொலை செய்துவிட்டு அவருடையை நகையை பறித்து விட்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து  மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>