மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலி; மகனின் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே: புளியங்குடி பெற்றோர் கதறல்

புளியங்குடி: மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியான மகனின் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே என மூணாறு சென்று புளியங்குடி திரும்பிய பெற்றோர் கண்ணீர் மல்கக் கூறி கதறி அழுதனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி அடுத்த ரத்தனபுரியைச் சேர்ந்த கருப்பன்- சீனியம்மாள் தம்பதியினர், 50 ஆண்டுகளுக்கு முன் மூணாறில் ராஜமலை பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலைக்கு சென்றனர். கருப்பன் ஓய்வுபெற்ற நிலையில் அவரது மகன் காந்திராஜனும், அவரது குடும்பத்தினரும் எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 6ம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன.

இதில் காந்திராஜன், அவரது மனைவி, இவர்களது மூன்று மகள்கள், 6 மாத பேரக்குழந்தை, அவரது மாமியார் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதைந்தனர். தகவலறிந்து காந்திராஜனின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 13 பேர் மூணாறு சென்றனர். ஆனால், மகனின் முகத்தை கூட பார்க்க முடியாத நிலையில் வேதனையுடன் திரும்பினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் கடந்த 9ம் தேதி மதியம் 1 மணிக்கு வேனில் முறையாக இ-பாஸ் அனுமதி பெற்று இறந்தவர்களின் முகத்தையாவது பார்த்து அவர்களை நல்லடக்கம் செய்ய நினைத்து புறப்பட்டோம். மாலை 6 மணிக்கு போடி மேட்டு பகுதியை சென்றடைந்தோம். அங்கு 3 மணி நேரம் காக்க வைத்த அதிகாரிகள், இவ்வழியாக உங்களை செல்ல அனுமதிக்க முடியாது என்றனர்.

இதையடுத்து மறுபடியும் திரும்பிய நாங்கள் குமுளி வழியாக மேலே சென்றோம். அங்கும் எங்களை 15 கி.மீ. தொலைவுக்கு முன்பாகவே நிறுத்திவைத்த அங்குள்ள சுகாதார அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது எங்கள் பிள்ளைகளின் முகத்தையாவது பார்க்க சீக்கிரம் அனுப்புமாறு கெஞ்சியபோதும் அங்கு நிலைமை சரியில்லை என்றதோடு 4 பேர் மட்டும் செல்லுமாறு அதிகாரிகள் கூறினர். அதன்ேபரில் அனுமதி கிடைக்கப் பெற்ற நாங்கள் 4 பேரும் சம்பவ இடத்திற்கே சென்றடைந்தோம். ஆனால், அதற்குள் எங்கள் பிள்ளைகள் உடல் எடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறி ஒரு இடத்தை காட்டினர். அந்த இடத்தில் மண் மூடப்பட்டு அங்கு குச்சிகள் ஊன்றப்பட்டிருந்தன.

அந்த ஒரு குச்சியில் எனது மகன் காந்திராஜன் பெயரும் இருந்தது. நான் எனது பேத்திகளின் முகத்தை பார்க்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினேன். ஆனால், அவர்களோ உங்களது இ- பாஸ் நேரம் முடிந்து விட்டது. உடனடியாக தமிழக எல்லைக்கு செல்லுமாறு எங்களை திருப்பி அனுப்பினர். இதனால் இறந்த எங்கள் மகனின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை. எங்களுக்கு எஸ்டேட் நிர்வாகமோ, கேரள அரசு அதிகாரிகளோ எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக எங்களை ஊருக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர். அவ்வளவு தொலைவு சென்றும் ஒருவர் முகத்தைகூட பார்க்க எங்களை விடாதது வேதனை தருகிறது’’ என்றனர்.

நிர்க்கதியான அவலம் காந்திராஜனின் தந்தை கருப்பன் கூறுகையில், ‘‘நானும், என் மனைவியும் 35 ஆண்டுகளாக ராஜமலை எஸ்டேட்டில் வேலை செய்தோம். நாங்கள் விருப்ப ஓய்வுபெற்ற நிலையில் அந்த வேலையில் எனது மகனும், மருமகளும் சேர்ந்தனர். எனது உடல்நிலை காரணமாக 15 ஆண்டுகளாக ரத்தனபுரியில் வசித்து வருகிறேன். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முதல்நாள் எங்களிடம் போனில் பேசிய எனது மகன், ‘‘இங்கு அதிக மழை பெய்கிறது. அங்கு நீங்கள் கவனமாக இருங்கள் என்று கூறினான். எங்களின் வாழ்வாதாரமே அவனை நம்பித்தான் இருந்தது. எங்களை பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டு அவன் இறந்து விட்டான்’’ என்று கண்ணீர் மல்க கூறி கதறி அழுதார்.

இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் எங்களை சந்தித்து ஆறுதல் கூற வரவில்லை. புளியங்குடி காவலர் ஒருவர்தான் எங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வாங்கி கொடுத்துவிட்டு சென்றார். ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஒரு நொடியில் பறி கொடுத்து விட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். எங்களுக்கு தமிழக அரசும், கேரள அரசும் தகுந்த உதவிகள் செய்ய முன்வர வேண்டும்’’ என்றார்.

Related Stories: