சிறப்பு மீட்பு விமானத்தில் தங்கம் கடத்திய 3 பேர் கைது

சென்னை: அபுதாபியிலிருந்து சென்னைக்கு ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த சாமிநாதன் கண்ணன் (41), தங்கவேல் சிவசங்கர் (49), திருச்சியை சேர்ந்த கமலூதீன் ஷாஜகான் (57) ஆகிய 3 பேர் உள்ளாடைக்குள் தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புடைய 402 கிராம் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். பிறகு மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அபுதாபியிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் வருவதற்கு, விமான டிக்கெட் எடுப்பதற்கு பணம் இல்லாமல் தவித்துள்ளனர்.

அப்போது, அங்குள்ள 2 ஆசாமிகள் இவர்களுக்கு விமான டிக்கெட்கள் எடுத்து கொடுத்துள்ளனர். அதோடு, மூன்று பேரிடமும் இந்த பார்சல்களை கொடுத்து உள்ளாடைகளில் மறைத்து வைத்து எடுத்து செல்லும்படி கூறி உள்ளனர். சென்னையில்  உங்களை தனிமைப்படுத்தும் 14 நாட்கள் கடந்ததும், எங்கள் நண்பர் ஒருவர் உங்களை சந்தித்து இந்த பார்சல்களை வாங்கிக்கொள்வார் என்று கொடுத்து அனுப்பினர் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இவர்களிடம் தங்கக்கட்டிகளை சென்னையில் பெற்றுக்கொள்ள இருந்த கடத்தல் ஆசாமி யார் என்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>