ஒடிசாவில் நக்சல்கள் பதுங்கியிருந்த 4 நக்சல் முகாம் அழிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தின் காந்தமர்தன் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் நக்சல் கும்பல், தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீஸ் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் வனப்பகுதிக்குள் நுழைந்து நேற்றிரவு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது காட்டில் பதுங்கியிருந்த நக்சல் கும்பல், பாதுகாப்பு படையினர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. பதில் தாக்குதலில் இருந்து நக்சல்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களது 4 முகாம்களை  பாதுகாப்பு படையினர் அழித்தனர்.

இதுகுறித்து  பர்கர் எஸ்.பி. பத்மினி சாஹூ வெளியிட்ட அறிக்கையில், ‘பர்கர் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல் கும்பல், அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டது தொடர்பாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்தது. அதையடுத்து, கூட்டு நடவடிக்கை குழு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. 10 முதல் 15 பேர் அடங்கிய நக்சல்கள் குழு அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த 4 முகாம்கள் அழிக்கப்பட்டன. அங்கு கையால் எழுதப்பட்ட சில ரகசிய குறிப்புகள் கிடைத்துள்ளன. தொடர் தேடுதல் வேட்டை நடக்கிறது’ என்றார்.

Related Stories: