தொழில் தொடங்க விரும்புவோருக்கு உடனடி அனுமதி: தென் மாவட்டங்களில் தொடங்கினால் பாதி மானியம்...முதல்வர் பழனிசாமி பேச்சு.!!!

நெல்லை: கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருநெல்வேலி சென்றுள்ளார்.  திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.208.30 கோடியில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2,800 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட  உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முடிவுற்ற ரூ.32.30 கோடி  மதிப்பிலான 20 திட்டப்பணிகளை  முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, சிறு, குறு தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா முடக்க காலத்தில் இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம்.  தொழில் தொடங்க விரும்புவோருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க முன்வந்தால் நிலத்தின் மதிப்பீட்டில் பாதி மானியமாக வழங்கப்படும் என்றார்.

தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு நிறுவனங்கள் மூலம் மாத இ-பாஸ் வழங்கப்படுகிறது. இ-பாஸ் வழங்குவதை எளிமைப்படுத்த கூடுதலாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும்  தமிழகம் வர விருப்பம் தெரிவிக்கின்றனர். சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் தமிழகம் வர விரும்பினால் இ-பாஸ் வழங்கப்படும். முறையாக செல்வோருக்கு இ-பாஸ் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. தொழில்துறை ஊழியர்களுக்கு கொரோனா சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. கொரோனா பரிசோதனைக்கு பின் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தலாம் என்றார்.

Related Stories: