இந்திய இராணுவத்தில் தற்காலிக பெண் அதிகாரிகளுக்கு பணி நிரந்தரமாக்கும் பணிகள் தீவிரம்!

டெல்லி: இராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி நியமனம் வழங்க கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்திய இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்க பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் அளித்தது. மேலும் இதுதொடர்பாக இராணுவத்தில் பெரிய பங்களிப்பை பெண் வீரர்கள் செய்ய இது வழிவகுக்கும்  என இராணுவ செய்தி தொடர்பாளர் கலோனல் அமன் ஆனந்த் அன்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்  இதுதொடர்பாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நிரந்தர பணி விவகாரம் தொடர்பாக பெண் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் அவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இந்த மாதம் இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இராணுவ வான் பாதுகாப்பு பிரிவு, சிக்னல்ஸ், இன்ஜினியர்ஸ், இராணுவ வான்பிரிவு, எலக்ட்ரானிக் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ், இராணுவ சேவை பிரிவு மற்றும் உளவுதுறை ஆகிய துறைகளில் உள்ள பெண் வீரர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய இராணுவத்தில் நீதிப்பிரிவு மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளில் உள்ள பெண் அதிகாரிகள் மட்டுமே நிரந்தர பணியிடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் எஸ்எஸ்சி வழியாக முன்பு தேர்வு செய்யப்படும் பெண் வீரர்கள் 14 வருடங்கள் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நிரந்தர பணி நியமனம் அவர்கள் ஓய்வு பெறும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: