இந்திய பகுதிகளை இணைத்து பாக். வெளியிட்ட புதிய வரைபடம்!: இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்..!!

டெல்லி: காஷ்மீர், லடாக் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை சேர்த்து முட்டாள்தனமான புதிய வரைப்படத்தை பாகிஸ்தான் வெளியிட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அரசியல் அபத்தமானது, சர்வதேச நம்பகத்தன்மை அற்றது, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்துவது என்று இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், காஷ்மீர், லடாக் பகுதிகளை இணைத்து பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் என ஒன்றை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ளார்.

அதில் காஷ்மீர், லடாக் மற்றும் குஜராத்தின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, பாகிஸ்தானின் செயல் அரசியல் அபத்தம் என்றும், சர்வதேச நம்பகத்தன்மையோ, சட்டப்படியான செல்லுபடியோ இல்லாதது என்றும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற விசித்திரமான வெளியீடுகள் மூலம், இந்திய பகுதியை ஆக்கிரமிக்கும் பாகிஸ்தானின் பேராசையும், அதற்காக அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதும் சர்வதேச அரங்கில் உறுதியாகிறது என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் இந்திய பகுதிகளை சேர்த்து நேபாளம் புதிய வரைபடத்தை வெளியிட்ட சர்ச்சை ஓய்வதற்குள் பாகிஸ்தானும் தற்போது தன் பங்கிற்கு அதை செய்திருக்கிறது. இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முட்டாள்தனத்தை காட்டுவதாக தெற்காசிய அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: