ராணிப்பேட்டையில் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க எதிரிப்பு தெரிவித்த விவகாரம்: 5 பேர் மீது வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த 36 வயது பெண், அங்குள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். கடந்த மாதம், 31ம் தேதி அவருக்கு கொரோனா உறுதியானது. இதனால், கடந்த 1ம் தேதி வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மறுநாள் அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை, ராணிப்பேட்டை அருகே நவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய, நேற்று மதியம், 3:00 மணிக்கு ஆம்புலன்சில் எடுத்து வந்தனர்.

இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸை வழிமறித்தனர். பாதுகாப்பாக உடல் அடக்கம் செய்யப்படும் என, அவர்களிடம் வருவாய்த்துறையினர் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உறவினர்கள் அஞ்சலி செலுத்தக்கூடாது, ஆம்புலன்சிலிருந்து நேரடியாக இறக்கி அடக்கம் செய்ய வேண்டும் என, அவர்களின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றனர். அதன்பிறகு, செவிலியரின் உடல் வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னிலையில், பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில்,  செவிலியர் உடலை புதைக்க இடையூறு செய்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்  பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: