ஊரடங்கால் ஏற்பட்டுள்ள அவலம்: வெளியூர் வியாபாரிகள் யாரும் வராததால்மரத்திலேயே அழுகி வீணாகும் கொய்யா: பண்ருட்டி விவசாயிகள் வேதனை

பண்ருட்டி:  ஊரடங்கால் கொய்யா பழங்களை வாங்குவதற்கு வௌியூர் வியாபாரிகள் வராததால் மரத்திலேயே அழுகி வீணாகி வருகிறது. இதனால் பண்ருட்டி பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகைமேடு, ராசாபாளையம், வரிஞ்சிபாக்கம், சின்னப்பேட்டை, ஒறையூர் மற்றும் கரும்பூர் ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகளவில் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நிலத்திற்கு வந்து மொத்தமாக  கொய்யா பழத்தை வாங்கி செல்வார்கள்.

ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,  செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில் கொய்யா சீசன் தொடங்குகிறது. இந்த மாதத்தில்  ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை ஆகிய விஷேசங்கள் தொடர்ந்து  வருவதால் கொய்யா பழம் அமோக விற்பனை நடை பெறும். ஆனால் கொரோனா நோய்  தொற்றால் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால்  வெளி மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் பழம் வாங்குவதற்கு  வரவில்லை. இதுகுறித்து விவசாயி ஜெயன் கூறுகையில், ‘‘வெளியூர் வியாபாரிகள் வராததால் வேறு வழியின்றி குறைந்த விலைக்கு உள்ளூர்  வியாபாரிகளுக்கு  கொய்யா பழத்தை விற்கிறோம். ஆனாலும் எதிர்பார்த்த விற்பனை இல்லை.

இதனால் கொய்யா பழம் மரத்திலேயே பழுத்து அழுகி விழுந்து கிடக்கிறது. இந்த ஆண்டு கொய்யா விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே நஷ்டம் அடைந்த கொய்யா விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவராண தொகை வழங்க வேண்டும்” என்றார்.

Related Stories: