கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா?.. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவருக்கு வைகோ கண்டனம்: வழக்கை விரைவுபடுத்தி உரிமையை நிலைநாட்ட அரசை வலியுறுத்தல்


சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 95வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் கடந்த 30ம்தேதி நடைபெற்றது. தற்போது மேட்டூர் அணையில் 20.182 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 25 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.

தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என்று கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா, ‘‘மே மாதத்தில் திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீரை மட்டும் கர்நாடகா திறக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடிய நிலையில் கர்நாடகாவின் நீர் நிலைமை இல்லை” என்று கூறியுள்ளார். கர்நாடகாவின் கருத்தையே ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வழிமொழிந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

The post கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா?.. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவருக்கு வைகோ கண்டனம்: வழக்கை விரைவுபடுத்தி உரிமையை நிலைநாட்ட அரசை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: