9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர், வணிக ஆய்வாளர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது பிலால். இவரது வீட்டின் மேல் செல்லும் மின் கம்பியை மாற்றி அமைக்க தேவிபட்டினம் உதவி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வேலை விரைவாக நடக்க வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு, ஒப்பந்த ஊழியர் கந்தசாமி மற்றும் உதவி பொறியாளர் செல்வி ஆகியோர் ₹9 ஆயிரம் லஞ்ச பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முஹம்மது பிலால் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் ஆலோசனைப்படி கடந்த ஏப்.25ம் தேதி ரசாயனம் பவுடர் தடவிய பணத்தை முஹம்மது பிலால் கொண்டு சென்று ரமேஷ் பாபு, கந்தசாமியிடம் கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதில் தொடர்புடைய உதவி மின் பொறியாளர் செல்வி தலைமறைவானார். இதனை தொடர்ந்து தலைமறைவான உதவி மின் பொறியாளர் செல்வி, சிறையில் உள்ள வணிக ஆய்வாளர் ரமேஷ் ஆகிய இருவரையும், ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்(பொ) பாலமுருகன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

The post 9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர், வணிக ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: