தொழில் உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கைது: உதவியாளரும் சிக்கினார்

அம்பத்தூர்: சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சார்ந்த வரதன் (37), எலக்ட்ரானிக் எடை தராசுகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இதற்கான தொழில் உரிமம் சமீபத்தில் காலாவதியானதால், கடந்த மாதம் திருவள்ளூர் தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகம் சென்று, உதவி ஆணையர் வளர்மதியிடம் உரிமத்தை புதுப்பிக்க மனு அளித்துள்ளார். அப்போது அவர், தனது உதவியாளர் ஜான் பிரகாஷ் கேட்கும் பணத்தை கொடுத்து உரிமம் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வரதன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி லவக்குமாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வரதனிடம், அவர் கேட்கும் பணத்தை கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

 

அவரை பின்தொடர்ந்து போலீசார் சென்றபோது, அவர் பணத்தை வாங்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 30ம் தேதி மீண்டும் வரதன் ஜான்பிரகாஷை சந்தித்து உரிமம் தொடர்பாக பேசியுள்ளார். அவர் அம்பத்தூரில் உள்ள தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ரவிக்குமாரை சந்திக்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து உதவி ஆய்வாளர் ரவிக்குமார் (59) என்பவரை சந்தித்தபோது, அவர் ரூ.10ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உரிமத்தை புதுப்பித்து தருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து வரதன் மீண்டும் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி லவக்குமாரிடம் புகார் அளித்துள்ளார். அவர், ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வரதனிடம் கொடுத்து ரவிக்குமாரிடம் வழங்குமாறு கூறி அனுப்பினர். அதன்படி, நேற்று தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் ரவிக்குமாரிடம் பணத்தை கொடுத்தபோது அவர், எடை தராசை சர்வீஸ் செய்யும் தனது உதவியாளர் சுந்தரவேல் (57) என்பவரிடம் பணத்தை தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து  ரூ.10 ஆயிரத்தை சுந்தரவேலிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுந்தரவேல் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமாரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

Related Stories: