கலிபோர்னியா செர்ரி பள்ளத்தாக்கில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ!: 8,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..!!

வாஷிங்டன்: தெற்கு கலிபோர்னியாவின் ரிவர்ஸ் சைட் கவுண்டியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அந்நாட்டு தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர். அப்பில் பையர் என்று அழைக்கப்படும் இந்த காட்டுத் தீ லொஸ் ஏஞ்சல்ஸுக்கு  கிழக்கே உள்ள செர்ரி பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீயில் கடுமையான புகைமூட்டம், நெருப்பினால் வெப்பநிலை அதிகரித்தும் காணப்படுகிறது.

சுமார் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காட்டுத் தீயின் தாக்கம் தாளாமல் அப்பகுதியில் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். நெருப்பு காரணமாக சான் பெர்னாடினோ தேசிய பூங்காவும், சான் போர்கோனியோ வனப்பகுதியில் உள்ள முகாம்களும் மூடப்பட்டுள்ளன. சுமார் 1,300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர் கொட்டும் விமானங்களின் உதவியுடன், இந்த தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் நெருப்பை கட்டுப்படுத்துவதில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாம்பிரிங்சில் வெப்பநிலை சுமார் 41 டிகிரி செல்ஸியஸை தொட்டது. இதேநேரம் வெப்பநிலை, மிகக் குறைந்த ஈரப்பதம், கடலோர காற்று காரணமாக இந்த வார இறுதியில் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என தேசிய வானிலை சேவை  மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. செங்குத்தான, கரடுமுரடான மலைப்பகுதிகளிலேயே இந்த காட்டுத் தீ ஏற்பட்டுள்ள காரணத்தினால் தீயணைப்பு இயந்திரங்களின் போக்குவரத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: