விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பயங்கரம்: ராட்சத கிரேன் விழுந்து 11 தொழிலாளர்கள் பலி: 10 பேர் படுகாயம்

திருமலை: விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்துஸ்தான் துறைமுகம் உள்ளது. இங்கு கப்பல் கட்டும் பணிகள் மற்றும் கப்பல்களில் இருந்து வரக்கூடிய கன்டெய்னர்கள் ஏற்றி இறக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளுக்காக மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எடை தூக்கும் ராட்சத கிரேன் வாங்கப்பட்டது.   இந்நிலையில், நேற்று காலை சோதனை முறையில் 70 டன் எடை தூக்கும் பணிகள் ராட்சத கிரேனில் நடந்து கொண்டிருந்தது.

 இப்பணியில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ராட்சத கிரேன் ஒரு பக்கமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் கிரேனுக்கு அடியில் சிக்கினர். இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் தீவிர படுகாயமடைந்தனர்.  இதுகுறித்து விசாகப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த போலீசார் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும், படுகாயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த வருகின்றனர். இது குறித்து  முதல்வர் ஜெகன் மோகன்  கூறுகையில், ‘இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு தரமான  சிகிச்சை அளிக்கப்பட  வேண்டும். இந்த விபத்து குறித்து அரசு உரிய நடவடிக்கை  எடுக்கும்’ என  கூறினார்.

என்ன காரணம்?

‘ராட்சத கிரேன் வாங்கும்போது வழக்கமாக சோதனைகள் செய்தே வாங்கப்படும்.  ஆனால், இந்த கிரேன் வாங்கும்போது எவ்வித சோதனையும் செய்யாமல் வாங்கி உள்ளனர்.  தனியார் நிறுவன நிபுணர்கள் யாருமில்லாத நேரத்தில் இந்த சோதனைகள் நடந்ததால்  விபத்து ஏற்பட்டது,’ என ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: