தஞ்சை வங்கி வாடிக்கையாளர்களிடம் திருச்சி கும்பல் நூதன மோசடி: ஏடிஎம் கார்டே யூஸ் பண்ணல... ஆனா ரூ5 கோடி சுவாகா ஆயிடுச்சே...

* தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலம்

* வங்கி, போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என குமுறல்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பலரின் வங்கி கணக்கில் இருந்து ரூ5 கோடி வரை பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி, போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சிலர், அவர்கள் பணம் எடுக்காமலேயே பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. சில வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ₹10 ஆயிரம் வீதம் அடுத்தடுத்து ரூ50 ஆயிரம் வரை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மொத்தமாக ரூ2 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வங்கிக்கு சென்று கேட்டபோது இதுதொடர்பாக எங்களுக்கு தெரியாது என அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர், எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதேபோல் கடந்த வாரத்தில் அதிராம்பட்டினத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ3 கோடி வரை எடுக்கப்பட்டுள்ளது. சினிமா பாணியில் அரங்கேறும் இந்த மோசடி தஞ்சை மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவரில் ஒருவரான பாலசுப்பிரமணியன் கூறியதாவது: என்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எனது பாஸ்புக்கில் பதிவு செய்து பார்த்தபோது திருச்சியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனது ஏடிஎம் கார்டின் செயல்பாடுகளை முடக்கி விட்டேன். இதுதொடர்பாக வங்கியில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை போன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கி கணக்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்றார்.

Related Stories: