செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என கேட்டதால் ஆத்திரம் அண்ணன் மகனை வெட்டி கொன்ற சித்தப்பா: திருக்கழுக்குன்றம் அருகே பரபரபப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே பாடுத்திருந்த பாயை என் செருப்பால் மிதித்தாய் என கேட்டதால் ஆத்திரம் அடைந்த அண்ணன் மகனை, அவரது சித்தப்பா வெட்டி கொலை செய்துவிட்டு, மலை மீது பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் மண்டப தெரு இருளர் பகுதியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (36). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் பாய் போட்டு படுத்துக் கொண்டிருக்கும்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னக் கண்ணுவின் சித்தப்பாவான கடும்பாடி (55) என்பவர் குடிபோதையில் சின்னக்கண்ணு படுத்திருந்த பாயை செருப்பு காலால் மிதித்தவாறு சென்றுள்ளார். அப்போது, சின்னக்கண்ணு பாயை ஏன் செருப்பு காலால் மிதிக்கிறாய் என்று கேட்டபோது, இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கடும்பாடி, வீட்டிலிருந்த கத்தியை கொண்டு வந்து சின்னக்கண்ணுவின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்த சின்னக்கண்ணுவை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கடும்பாடியை தேடி வந்த நிலையில், அங்குள்ள மலை மீது பதுங்கியிருந்த கடும்பாடியை கத்தியுடன் போலீசார் கைது செய்தனர்.மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என கேட்டதால் ஆத்திரம் அண்ணன் மகனை வெட்டி கொன்ற சித்தப்பா: திருக்கழுக்குன்றம் அருகே பரபரபப்பு appeared first on Dinakaran.

Related Stories: