உத்தரகாண்டில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காங்., எம்.எல்.ஏ!!: ஆதரவாளர்கள் துரிதமாக செயல்பட்டதால் எம்.எல்.ஏ உயிருடன் மீட்பு!!!

விதோதாகர்:  உத்தரகாண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதால், உடனிருந்த ஆதரவாளர்கள் துரிதமாக செயல்பட்டு எம்.எல்.ஏவை உயிருடன் மீட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விதோதாகர் மாவட்டம் தார்சிலார் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிஷ்தாமி நேற்று தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் உள்ள சிறிய ஆற்றை கடந்து சென்றார்.

இந்நிலையில், காட்டாற்று வெள்ளம் ஓடிக்கொண்டிருந்த அந்த ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் எம்.எல்.ஏ ஹரிஷ்தாமி நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தார். அங்கு தண்ணீரின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவரை வெள்ளம் இழுத்து சென்றது. அப்போது,  உடனிருந்த ஆதரவாளர்கள் விரைந்து செயல்பட்டு எம்.எல்.ஏவை மீட்டனர்.  தற்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலையின் சிறிய பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது பஜ்பூர் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பத்ரிநாத் சாலை மூடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போக்குவரத்தானது வேறு சாலையில் மாற்றிவிடப்பட்டுள்ளன.

Related Stories: