தென்மேற்கு பருவமழையால் பசுமையான வத்தல் மலை : பறவைகள் வருகை அதிகரிப்பு

தர்மபுரி: தர்மபுரியில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால், வத்தல்மலை பசுமையாக காட்சியளிக்கிறது. தர்மபுரி வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளினூர் உள்ளிட்ட 8 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வத்தல்மலைக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. இதில், 23 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்கு தோட்டப்பயிர்களான, காபி, மிளகு, ஆரஞ்சி, சப்போட்டா, எலுமிச்சை, ரோஸ், செண்டுமல்லி, செவந்தி பூ, சில்வர் ஓக் மரங்கள் உள்ளன.

குச்சி கிழங்கு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விளைவிக்கப்படும் சிறுதானிய பயர்களை தர்மபுரி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவியது. இதனால், காபி, மிளகு பயிர்கள் கருகின. தற்போது தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் வத்தல்மலையில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்விட்டு பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘வத்தல்மலையில் கடும் வறட்சியின்போது, பறவைகள் குறைந்த அளவிலேயே இருந்தது. தற்போது பெய்து வரும் தொடர்மழையால் மரங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. இதனால், மயில், குயில், கிளி, மைனா, கவுதாரி உள்ளிட்ட பறவைகள் அதிகமாக வந்துள்ளன,’ என்றனர்.

Related Stories: