மிரட்டலுக்கு மேல் மிரட்டல் ராமர் கோயில் பூமி பூஜைக்கு வரும் மோடிக்கு தீவிரவாதிகளால் ஆபத்து: அயோத்தியில் மேலும் படைகள் குவிப்பு

லக்னோ: ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கும் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதால், அயோத்தியில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு சர்ச்சைகளையும், சட்டப் போராட்டங்களையும் கடந்து ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி இதற்காக பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டும் விழாவும் அயோத்தியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக 200 விருந்தினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்டு உள்ளனர். இதில், பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். ஆனால், இதில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவருக்கு தீவிரவாத அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, பூமி பூஜையை சீர்குலைப்பதற்காக அயோத்தியில் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சில, சதித் திட்டம் தீட்டியுள்ளன.  தற்போது, மோடிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து உளவுத்துறைகள் வெளியிட்ட எச்சரிக்கை காரணமாக, தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் அயோத்தி தற்போது வந்திருக்கிறது. நகரம் முழுவதும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்திய - நேபாள எல்லையான மகாராஜ்கஞ்ச் பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

* அயோத்தியில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பிறகே, மாவட்ட எல்லைக்குள் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

* நகரம் முழுவதும் ஏற்கனவே கமாண்டோ படைகள், போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பெண்கள் கமாண்டோ படைகளும் களமிறக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பில் மோப்ப நாய்களும் ஈடுபட்டுள்ளன.

* கொரோனா காரணமாக ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்றவை தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

* பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

அயோத்தியில் 5ம் தேதி நடைபெறும் பூமி பூஜையில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதாலும், கொரோனா தனிமனித இடைவெளி காரணமாகவும் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த பூஜையை மக்கள் காண்பதற்கு வசதியாக, அயோத்தி நகரம் முழுவதும் பிரமாண்ட திரைகள் அமைக்கப்படுகின்றன.

* நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஏற்பாடு

அயோத்தியில் நடக்கும் பூமி பூஜை விழாவை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்திலும் பிரமாண்ட திரைகள் மூலமாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

* ஜீயர், 14 போலீசுக்கு கொரோனா

பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் ஜீயருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 14 போலீசாருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: