கடுமையான பணி சுமையை தாங்க முடியவில்லை மன அழுத்தத்தை போக்கவே சொப்னா வீட்டிற்கு சென்றேன்: என்ஐஏ.விடம் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் வாக்குமூலம்

திருவனந்தபுரம்: பணியால் ஏற்படும் கடும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சொப்னா வீட்டுக்கு சென்றதாக என்ஐ விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கூறியுள்ளார். திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சொப்னாவுடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்து என்ஐஏவிடம் சிவசங்கர் கூறியதாவது: தலைமை செயலகத்தில் பணி முடிய பெரும்பாலும் நள்ளிரவு ஆகிவிடும். அப்போது நான் கடும் மன அழுத்தத்தில் இருப்பேன்.

இந்த அழுத்தத்தை குறைப்பதற்காகவே சொப்னாவை பார்க்க அடிக்கடி சென்று வந்தேன். இதற்காகத்தான் தலைமை செயலகத்துக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்தேன். சொப்னாவின் வீட்டுக்கு சென்று வருவதன் மூலம் மன அழுத்தம் பெருமளவு குறைந்தது. எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. சொப்னா வீட்டில் நடக்கும் மது விருந்திலும் கலந்துகொள்வேன். இதுவும் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. இந்த விருந்தில் வைத்து தான் சரித், சந்தீப்நாயருடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு முதலில் சொப்னாவை மட்டும் தான் தெரியும்.

அவரது கணவர் எனக்கு உறவினர் ஆவார். கேரள அரசில் எனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி என்னை அந்த கும்பல் சதியில் சிக்க வைத்து விட்டது. அதை புரிந்துகொள்வதில் நான் தவறு செய்துவிட்டேன். சொப்னாவுடன் வந்த கும்பல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டது குறித்து எதுவும் தெரியாது. நான் தேச விரோத செயல்கள் எதற்கும் துணை போகவில்லை. என்னை வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கிறது. சொப்னாவுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்னைகள் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விசாரணையை 10 நாளில் முடிக்க அறிவுரை: மத்திய உள்துறை என்ஐஏவுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. குற்றவாளியாக சேர்க்கப்படாத மூத்த ஐஏஎஸ் அதிகாரியை தொடர்ந்து விசாரிப்பது நல்லதல்ல. எனவே இந்த வழக்கில் சிவசங்கரின் தொடர்பு குறித்த விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்த என்ஐஏ தீர்மானித்துள்ளது. சொப்னாவுடன் சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் தங்கம் கடத்தல் தொடர்பாக சிவசங்கருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்று என்ஐஏ நம்புகிறது. இதனால் சிவசங்கருக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் என்ஐஏ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

* அதிகாரி திடீர் இடமாற்றம்

இவ்வழக்கை முதலில் சுங்க இலாகா இணை ஆணையாளர்அனீஷ் பி.ராஜன் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இவரது தலைமையிலான தனிப்படைதான் 16 பேரை கைது செய்து விசாரித்தது. இந்நிலையில் இவர் திடீர் என்று நாக்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மார்க்சிஸ்ட் ஆதரவாளர் என்று பா.ஜ. குற்றம்சாட்டி இருந்தது. இவர் தனது பேஸ்புக்கில் முதல்வர் பினராய் விஜயனை புகழ்ந்து பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன், அவரை விசாரணை குழுவில் இருந்து நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிலையில், நேற்று இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* உபா வழக்கு ஏன்?

தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக என்ஐஏ உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சொப்னா, சந்தீப்நாயரை கைது செய்துள்ளது. இவர்களின் ஜாமீன் மனு மீதான நேற்றைய விசாரணையின்போது சொப்னா தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இது சாதாரண தங்கம் கடத்தல் வழக்கு. இதில் தீவிரவாதிகள் தொடர்பு கிடையாது. எனவே உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை,’ என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்து என்ஐஏ தரப்பு வக்கீல் கூறுகையில், ‘இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பு குறித்த முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த விவரங்களை திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தால் விசாரணை பாதிக்கும்.  இக்கும்பல், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயன்றுள்ளது,’ என்று வாதிட்டார்.

* இசையமைப்பாளர் பாலபாஸ்கர் பலியான வழக்கை சிபிஐ ஏற்றது

கேரளாவில் பிரபல வயலின் இசை கலைஞராக இருந்தவர் பாலபாஸ்கர். கடந்த 2018 செப்டம்பர் 25ம் தேதி மனைவி  லட்சுமி, 2 வயது மகள் தேஜஸ்வி, குடும்ப நண்பர் அர்ஜூன் ஆகியோருடன் திருச்சூரில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பும்போது, ஒரு மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், தேஜஸ்வியும், பாலபாஸ்கரும் பலியாகினர். இந்த விபத்தில் மர்ம இருப்பதாக பாலபாஸ்கரின் தந்தை குற்றம்சாட்டியதை தொடர்ந்து, இது பற்றி விசாரிக்கும்படி சிபிஐ.க்கு முதல்வர் பினராய் சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தார். இந்நிலையில், தங்கம் கடத்தல் பற்றி நடத்தப்பட்ட விசாரணையில், பாலபாஸ்கர் சாவுக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ நேற்று விசாரணைக்கு ஏற்றது.

Related Stories: