டெல்லியில் அரசு இல்லத்தில் குடியிருந்த வீட்டை காலி செய்தார் பிரியங்கா காந்தி

டெல்லி: டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் அரசு இல்லத்தில் குடியிருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வீட்டை காலி செய்தார். ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று பிரிங்கா காந்தி வெளியேறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. கடந்த 1-ம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.

ஆதலால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள எண் 35, 5பி இல்லத்தை பிரியங்கா காலி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் வீட்டைக் காலி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இந்த வீடு கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் பிரியங்கா காந்தி தான் தங்கியிருக்கும் வீட்டைக் காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். டெல்லியில் தங்கிக்கொள்ள குருகிராமில் செக்டர் 42 பகுதியில் தனியாக வீடு ஒன்றைத் தற்காலிகமாக பிரியங்கா காந்தி வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த வீட்டில் பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக மிகத்தீவிரமாக நடந்து வந்தன. அந்தப்பணிகள் முடிந்த நிலையில் பொருட்கள் அனைத்தும் அங்கு மாற்றப்பட்டு இன்று தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து பிரியங்கா காந்தி வெளியேறினார்.

Related Stories: