சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை பற்றி பொதுமக்கள் கருத்து கூற அவகாசம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: சுற்றுச்சூழல் பாதிப்பு வரைவு அறிவிக்கை பற்றி மக்கள் கருத்து கூற அவகாசம் அளித்த  டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்படும் திட்டங்கள், புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்கனவே கிடப்பில் இருக்கும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கும் விதமாக, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 2006’ல், மத்திய அரசு பல்வேறு அதிரடி திருத்தங்களை செய்துள்ளது. ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020’ வரைவு அறிவிக்கை என்ற பெயரில் கடந்த மார்ச் 23ம் தேதி இது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வரைவு அறிவிக்கையின்படி, இனிமேல் எந்த திட்டங்கள் பற்றியும் மக்களிடம் கருத்து கேட்பது கட்டாயம் கிடையாது.

இந்த புதிய வரைவு அறிவிக்கை, பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், இதனால் நாட்டின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டது. இதை விசாரித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த  வரைவு அறிவிக்கை பற்றி, நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இதற்காக, இந்த அறிவிக்கையை தமிழ் உட்பட 22 பிராந்திய மொழிகளில் இதை மொழி பெயர்த்து, 10 நாட்களுக்குள் வெளியிட வேண்டும். மேலும், இது பற்றி ஆகஸ்ட் 11ம் தேதி வரை தங்கள் கருத்துக்களை கூற, பொதுமக்களுக்கு அரசு அவகாசம் வழங்க வேண்டும்,’ என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.அதில், ‘மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவையும், அதற்காக வழங்கப்பட்ட அவகாசத்தையும் ரத்து செய்ய வேண்டும். இது, அரசின் கொள்கை சார்ந்த விஷயமாகும். இதில், நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களும் அடங்கியுள்ளன. அதேபோல், இந்த வரைவு அறிவிக்கையை மொழி பெயர்த்து வெளியிடுவதையு்ம் ஏற்க முடியாது,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: