திருப்பதியில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள்; 2வது நாளாக 3 கி.மீ. நீண்ட வரிசை: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் அலைமோதுகின்றனர். இதனால் 2வது நாளாக நேற்றும் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் 24 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பி பக்தர்கள் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதன்படி ஒரே நாளில் 90,721 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 50,599 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.28 கோடி காணிக்கை செலுத்தினர்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், 2வது நாளாக நேற்று காலையும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் பாபவிநாசம் சாலையில் சுமார் 3 கி.மீ. தூரமுள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அதேபோல் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். கடந்த 17ம் தேதி பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு 24 மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பதியில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள்; 2வது நாளாக 3 கி.மீ. நீண்ட வரிசை: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: