நாடாளுமன்ற கட்டிடம் 3,300 வீரர்கள் பாதுகாப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு பணி இன்று காலை 6 மணி முதல் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும், நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் 4 பேர் கலர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் 7 பேர் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து ஆளும் பாஜ அரசு மீது எதிர்க்கட்சியினர் கடும் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். இதையடுத்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணி மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு(சிஐஎஸ்எப்) மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஐபிஎஸ் அதிகாரி அனுராக் தாக்கூர் நாடாளுமன்ற பாதுகாப்பு தலைவராக கடந்த மார்ச் 1ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு பணி ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து இன்று காலை 6 மணி முதல் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 3,300க்கும் மேற்பட்ட வீரர்கள் நாடாளுமன்றத்தில் பணிகளை மேற்கொள்கின்றனர்.

The post நாடாளுமன்ற கட்டிடம் 3,300 வீரர்கள் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: