கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளையும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்க மத்திய அரசு அனுமதி!!

டெல்லி : ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்போது 60 ஆயிரம் கோடிக்கும் மேல் கடனில் தத்தளித்து வருகிறது. நஷ்டத்திலிருந்து ஏர் இந்தியாவை மீட்க மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்தும் அது பலன் தரவில்லை என்று கூறப்படுகிறது. ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்கும் அரசின் முதல் முயற்சி தோல்வியடைந்தது. எனினும் பங்குகளை விற்கும் முயற்சியை அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அதன்படி, ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீடு குறித்த கொள்கையில், செய்யப்பட்டு இருக்கும் மாற்றத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு விமான நிறுவனங்களை உள்ளடக்கிய வெளிநாட்டு முதலீடுகள் ஏர் இந்தியாவில் 49% சதவீததிற்கும் மிகாமல் இருக்கும். இந்த முதலீட்டு வரம்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீற முடியாது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100% வரை பங்குகளை வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவற்றின் முன் அனுமதியின்றி முதலீட்டை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான முந்தைய முயற்சிகள் தோல்வி அடைந்ததால், முதலீட்டை ஈர்ப்பதற்காக விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏலத்திற்கான காலக்கெடு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியா பங்குகளை விற்க அரசு எடுக்கும் 3வது முயற்சியாகும்.

Related Stories: