ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு அரை மணி நேரத்தில் படுக்கை வசதி செய்து தரவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை :முதல்வர் ஜெகன் உத்தரவு

ஹைதராபாத் : ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு அரை மணி நேரத்தில் படுக்கை வசதி செய்து தரவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எச்சரித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,948 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,10,297 ஆகி உள்ளது  இதில் நேற்று 58 பேர் உயிரிழந்து மொத்தம் 1148 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,064 பேர் குணமடைந்து மொத்தம் 52,622 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆந்திராவில் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இருப்பினும் ஆந்திராவின் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியர்கள், துணை ஆட்சியர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என்று எந்த கொரோனா நோயாளியும் சொல்லக் கூடாது. அப்படி கூறினால், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் பொறுப்பேற்க வேண்டும். படுக்கை கிடைக்கவில்லை என்ற பேச்சே எழக்கூடாது. இது ஆந்திர அரசின் கவுரவ பிரச்சனையாகும்,என்றார்.

இதனிடையே கர்நாடக மாநிலத்தில் புதிய உச்சமாக நேற்று 5,536 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1.7 லட்சத்தை தாண்டியது. புதிதாக 102 பேர் உயிரிழந்த நிலையில், வைரஸ் பாதிப்பால் மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2055 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 40,504 ஆக உள்ளது. தற்போது மாநிலம் முழுவதிலும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 64,434 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: