31 மாவட்ட செயலாளர்கள் நியமனம் எதிரொலி அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி: அமைச்சர்களின் பொறுப்பு மாவட்டங்கள் மட்டும் பிரிக்கப்படாதது ஏன் எனக் கேள்வி

சென்னை: அதிமுகவில் 31 புதிய மாவட்டச் செயலாளர்கள் கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டதில், அமைச்சர்களின் மாவட்டங்கள் மட்டும் பிரிக்கப்படாததால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுகவில் தற்போது செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்றவும், மாவட்டங்களை பிரிக்கவும் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் பட்டியல் தயாரித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினர். அந்தப் பட்டியலை இருவரும் நிராகரித்து விட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக, பல அமைச்சர்களின் பொறுப்புகளில் உள்ள மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்படாதவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மாற்றப்படவும் இல்லை. இதனால் மூத்த தலைவர்கள் 5 பேரும், மீண்டும் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை 31 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் புதிதாக உருவாக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களைப் போல, கட்சியிலும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதை தவிர, திருவள்ளூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் மட்டுமே பிரிக்கப்பட்டன. கோவையில் அமைச்சர் வேலுமணியிடம் இருந்து 2 தொகுதி மட்டுமே பிரிக்கப்பட்டன.

அந்த இரு தொகுதிகளும் அவருடைய ஆதரவாளரான அம்மன் அர்ஜூனனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் அருண்குமாரிடம் இருந்து ஒரு தொகுதியை பிடுங்கி அம்மன் அர்ஜூனனிடம் வழங்கப்பட்டது. அமைச்சர் வேலுமணி 5 தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர அமைச்சர்களின் மாவட்டங்கள் எதுவுமே பிரிக்கப்படவில்லை.அதில், குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு மாவட்டத்திற்கு சி.வி.சண்முகமும் மற்றொரு மாவட்டத்துக்கு முன்னாள் எம்பி லட்சுமணனும் நியமிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரும்பினார்.

இதை கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் ஆதரித்தனர். ஆனால், சண்முகமோ மாவட்டத்தை பிரித்தால், விழுப்புரத்தில் அதிமுகவே இருக்காது என்று கூறிவிட்டார். இதனால் அவரது மாவட்டம் பிரிக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து 6 சட்டப்பேரவை தொகுதி கொண்ட பெரிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவே நீட்டிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டமாக பிரிக்கப்பட்டதால், அது மட்டும் பிரிக்கப்பட்டு முதல்வரின் தீவிர ஆதரவாளரான குமரகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், செல்வாக்கான அமைச்சர்கள் கவனிக்கும் மாவட்டங்கள் எதுவுமே பிரிக்கப்படவில்லை. குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் கவனிக்கும் புதுக்கோட்டை, தங்கமணி கவனிக்கும் நாமக்கல், கருப்பணன் கவனிக்கும் ஈரோடு, அன்பழகன் கவனிக்கும் தர்மபுரி, பாஸ்கரன் கவனிக்கும் சிவகங்கை, ராஜேந்திர பாலாஜி கவனிக்கும் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை. அதோடு, சென்னையில் தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் ஒரு முக்கிய எம்எல்ஏ மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் தலைநகரில் இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை அவர்தான் நடத்துகிறார்.

அமைச்சர் ஜெயக்குமாரை விட செல்வாக்காக இருக்கிறார். அதிகாரிகள் நியமனத்திலும் அவரது சொல்தான் எடுபடுகிறது. இதை வைத்து அவர் சூதாட்ட கிளப்புகள், மசாஜ் சென்டர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதோடு, பல முக்கிய ரவுடிகள் இவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். அவர்கள் பல கடத்தல்கள், கொலைகளை செய்தாலும் போலீசார் மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விட்டு முக்கிய ரவுடிகளை விட்டு விடுகின்றனர்.

இதுபோலத்தான் மற்ற இடங்களிலும் ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர்களை மாற்ற இந்த 5 குழு ஆலோசனை நடத்தியது.

ஆனால் சென்னையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மாவட்டச் செயலாளரை மாற்ற அமைச்சர் வேலுமணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். அமைச்சர்களையும் மாற்ற முடியவில்லை. மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற முடியவில்லை. இதனால் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் நியாயமான தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா காலம் என்பதால் தற்போது அவர்கள் அமைதி காக்கின்றனர். இல்லாவிட்டால் இதற்குள் பல மாவட்டங்களில் போர்க்கொடியும், முற்றுகையும் நடைபெற்று இருக்கும். ஏன் கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே முற்றுகை நடந்திருக்கும் என்கின்றனர் நிர்வாகிகள். மேலும், தங்களுடைய குமுறல் விரைவில் எரிமலையாக வெடிக்கும் என்றும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர். அமைச்சர் சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தை பிரித்தால், விழுப்புரத்தில் அதிமுகவே இருக்காது என்று கூறிவிட்டார். இதனால் அவரது மாவட்டம் பிரிக்கப்படவில்லை.

Related Stories: