படுக்கையிலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து இறந்த கொரோனா நோயாளி: வேடிக்கை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள்

திருமலை: தெலங்கானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், கங்காதர் மண்டலம் வெங்கடய்யப்பள்ளியை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக கரீம்நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் படுக்கையில் இருந்து கீழே விழுந்தார்.

பின்னர், திடீரென கை, கால்களையும் 40 நிமிடங்களாக உதைத்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது, மருத்துவமனை ஊழியர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. மேலும், சக நோயாளிகள் அங்கிருந்தும் உதவி செய்யவில்லை. இதனை வீடியோ எடுத்து சக நோயாளிகள் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  நீண்ட நேரமாகியும் சடலத்தை ஊழியர்கள்  எடுத்து செல்லவில்லை. மறுபுறம் சடலத்தை வாங்க அவரது குடும்பத்தினர் யாரும் முன்வரவில்லை. இதனால், சடலம் சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ரத்னமாலா கூறுகையில், ‘‘நோயாளி கட்டிலில் இருந்து விழுந்தவுடன் செவிலியர்கள் உடனே ஆக்ஸிஜனை அளித்தனர். இருந்தபோதும் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை’’ என்றார்.

Related Stories: