நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பரிந்துரை..!!

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளுடன் 6-ம் கட்ட ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த தடை காரணமாக திரையரங்க ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திரையரங்கு உரிமையாளர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற தயாராக இருப்பதாகவும், திரையரங்குகளை திறந்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி பிறக்கும் என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இதனையடுத்து, ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உள்துறை அமைச்சருக்கு பரிந்துரையை அனுப்பி உள்ளது. அந்த பரிந்துரையில் 25 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் இந்த பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

Related Stories: