சட்டமன்றத்தை திறந்த வெளியில் நடத்தியது வரவேற்கத்தக்கது: பட்ஜெட்டை சிறப்பாக தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி பாராட்டு...!!!!

புதுச்சேரி: கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வகையில்,   இன்று  21-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. புதுச்சேரி அரசு சார்பில் கார்கில் நினைவு தினம் இன்று நடைபெற்றது. கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரில் உள்ள கார்கில் நினைவிடத்தில் துணைநிலை  ஆளுநர் கிரண்பேடி,முதல்வர் நாராயணசாமி,சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமிநாராயணன் எம்எல்ஏ ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட ஆளுநர் கிரண்பேடி, பட்ஜெட்டை சிறப்பாக தாக்கல் செய்ததாக கூறி முதல் அமைச்சர் நாராயணசாமியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் உடனிருந்த சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம், சரியான நேரத்தில்  சட்டமன்ற நிகழ்வை மரத்தடியில் திறந்த வெளியில் நடத்தியது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது என கூறினார்.

புதுச்சேரி வரலாற்றில் இந்த நிகழ்வு இடம் பெற்றிருக்கும். மரத்தடியில் சட்டசபை நடந்தது இந்திய அளவில் பேசப்பட்டுள்ளது என்றார். மேலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை எப்பொழுது நடைபெற  இருக்கிறது என முதலமைச்சரிடம் கிரண்பேடி கேட்டார். இதற்கு முதல் அமைச்சர் நாராயணசாமி, திங்கட்கிழமை நாளை அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இதற்கும் பாராட்டு தெரிவித்து ஆளுநர் கிரண்பேடி  புறப்பட்டார். புதுச்சேரியில், முதல் அமைச்சர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டாலும், சில நேரங்களில் நெகிழ்ச்சி சம்பவங்களும் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

Related Stories: