2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்: மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு நாளை காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி...!!!

டெல்லி : மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு நாளை காணொலிக் காட்சி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் 1,185 குடியிருப்புகளில் உள்ள 1,42,749 வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகளை  அளிப்பதற்காக மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது. வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறையிலிருந்து கூடுதல் நிதியைப் பெற்று மீதியுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பினை வழங்க மணிப்பூர்  அரசு திட்டமிட்டுள்ளது.

மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டம், கிரேட்டர் இம்பால் பகுதியில் மீதமிருக்கும் வீடுகள், 25 சிறு நகரங்கள், 1,731 கிராமப்புற குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம்  மணிப்பூர் மாநிலத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 2,80,756 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படும். இந்தத் திட்டம், 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற இலக்கை அடைய மணிப்பூர் அரசுக்கு உதவும். புதிய வளர்ச்சி  வங்கி அளித்துள்ள கடன் உதவியுடன், ரூ.3054.58 கோடி செலவில் இது செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணி அடிக்கல் நாட்டுகிறார். டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில்,  மணிப்பூர் மாநில ஆளுநர் நச்மா எப்துல்லா, முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்பாலில் இருந்து கலந்து கொள்கின்றனர். இத்திட்டம், மத்திய அரசின் 2024-க்குள் அனைத்து  கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்திற்கு முக்கிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல் ஜீவன் திட்டம்:

கடந்த வருடம் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கும் ஜல் ஜீவன்  திட்டத்தை அறிவித்தார். 2024-க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீரை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும், தற்போது இந்தியாவின் கிராமப்புறங்களில் 18 சதவிகிதம் குடும்பங்களுக்கு மட்டும்,  குழாய் மூலம் நீர் வழங்கபட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில், இதனை ஐந்து மடங்காக உயர்த்துவதே, இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்றும்  கூறியுள்ளார்.

குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவரப்படும் ஜல் ஜீவன் திட்டமானது உள்ளூர் அளவில் மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டுதல், கழிவு நீர் சுத்திகரிப்பு மூலம் விவசாய தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்டவற்றையும்  கவனத்தில் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன், மாநில அரசுகளும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்ளும் என பிரதமர் மோடி கூறினார்.

Related Stories: