வரும் 24-ம் தேதி சட்டமன்றத்தில் உரை: புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்..!!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை  பட்ஜெட் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்குவது வழக்கம். அதன்படி, 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட வரையறைக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட  இழுபறிக்கு பின் இதற்கு அனுமதி கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு பட்ஜெட் கூட்டம் கவர்னர் உரையுடன் துவங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். இதற்கிடையே கடந்த 19-ம் தேதி இரவு கவர்னர் கிரண்பேடி,  முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், துறை வாரியான நிதி ஒதுக்கீடு, நிதிநிலை அறிக்கை குறித்த முழு விவரங்கள் கிடைக்கவில்லை. எனவே, பட்ஜெட் கூட்டத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அன்று இரவே, முதல்வர்  நாராயணசாமி இதற்கு விளக்கம் அளித்து, கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம் 9.50 மணிக்கு தாமதமாக கூடியது.

துணை நிலை ஆளுநர் வருகை தராத காரணத்தால், விதி எண் 309ன் கீழ் துணை நிலை ஆளுநர் உரை நிறுத்தி வைக்கப்படும் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விட்டு, நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அன்றைய தினம், மதியம் 12.05 மணிக்கு  நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரையை நிறுத்தி வைத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ரூ.9 ஆயிரம் கோடி பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், வரும் 24-ம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் கிரண்பேடி உரையாற்றவுள்ளார்.

Related Stories: