குழந்தை காப்பகங்களுக்கு தரும் நிதியுதவி எவ்வளவு? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பங்களுக்கு எவ்வளவு நிதியுதவி வழங்கப்படுகிறது?’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்தர் பட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் உத்தரவில், “நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு மத்திய அரசு எவ்வளவு நிதியுதவி வழங்குகிறது?

அது எத்தகைய முறையில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்ற விவரங்களை அடுத்த 2 வாரத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், மாநில அரசுகள் குழந்தைகள் காப்பகத்தை பராமரிப்பது தொடர்பான நல்ல விஷயங்கள் கொண்ட அறிக்கையையும் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம், காப்பகங்கள் தொடர்பான நிறைகுறைகளை கண்டறிந்து பொதுவான ஒரு உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு ஏதுவாக இருக்கும்,’’ என்றனர். பின்னர், வழக்கை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: